மலப்புரம் எம்.பி. தொகுதி இடைத்தேர்தல்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் மாபெரும் வெற்றி கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் அகமது.

காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான அகமது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற போது மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதையடுத்து அவர் வெற்றி பெற்ற மலப்புரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. கடந்த 12-ந்தேதி அங்கு ஓட்டு பதிவு நடந்தது.

இத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் குஞ்சாலிகுட்டி வேட்பாளராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி சார்பில் பைசலும், பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் ஸ்ரீபிரகாசும் போட்டியிட்டனர்.


மும்முனை போட்டி நிலவிய இத்தொகுதியில் மீண்டும் வெற்றியை ருசிக்க காங்கிரஸ் கூட்டணி கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டது.

இடைத்தேர்தலில் இத்தொகுதியில் 71.33 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. இந்த ஓட்டுகள் எண்ணும் பணி மலப்புரம் அரசு கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

8.30 மணிக்கு முதல் கட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரம் வெளியானது. முதல் சுற்றிலேயே காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குஞ்சாலிகுட்டி முன்னிலை பெற்றார்.

அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்று 1,71,038 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 5, 15,325 வாக்குகள் பெற்றிருந்தார்.

அவருக்கு அடுத்தபடியாக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பைசல் 3, 44, 287 வாக்குகளும், 3- வது இடம் பிடித்த பாரதீய ஜனதா வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் 65,662 வாக்குகளும் பெற்றனர்.

காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக குஞ்சாலி குட்டி வெற்றி பெற்றதும் அவரை தோளில் தூக்கி வைத்து கட்சியினர் கொண்டாடினர். கேரளா முழுவதும் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

தற்போது கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் இடைத்தேர்தலில் அந்த கட்சி தோல்வி அடைந்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாரதீய ஜனதாவை பொறுத்தவரை கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலை விட குறைவான வாக்குகளே பெற்றுள்ளது.

மலப்புரம் தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மரணம் அடைந்த அகமது ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 739 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் வாக்கு வித்தியாசமும் குறைந்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.