மியன்மார் – கொன்று எரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்மியன்மர் என்று அழைக்கப்படும் பர்மாவில் கடந்த பல வருடங்களாக ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய தாக்குதல்கள் அந்நாட்டு அரசாங்கத்தினாலேயே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக அஸின் விராது என்ற தேரரின் தலைமையிலான 969 இயக்கம் (969 Movement) கடந்த காலங்களில் பாரிய தாக்குதல்களையும், அத்துமீறல்களையும் மேற்கொண்டது. சிறுவர்கள் குழந்தைகள், வயோதிபர்கள் என்று யாரையும் விட்டு வைக்காது அனைவர் மீதும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை இவர்கள் முன்னெடுத்தார்கள்.

“அகிம்சை பேசும் பௌதம் எம் மதம்” என்று சொல்லிக் கொண்ட இவர்கள் அகிம்சைக்கு நேர் மாற்றமாக தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டார்கள்.
இவர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு அரசும், இராணுவமும் துணை புரிந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஓரிரு வருடங்களாக 969 இயக்கத்தின் மூர்க்கத்தனத்தை மிஞ்சும் வகையில் மியன்மர் நாட்டு இராணுவமே நேரடியான ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளை செய்து வருகிறது.

ஆண்கள், சிறுவர், முதியவர்கள் என்று அனைத்துத் தரப்பினர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதுடன், பெண்களை கற்பழிக்கும் கீழ்த்தரமான காரியத்திலும் அந்நாட்டு இராணுவம் இறங்கியுள்ளது.
எந்தவொரு உள்நாட்டு ஊடகங்களும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில்லை. வெளிநாட்டு ஊடகங்கள் ரோஹிங்யா பகுதிக்குள் உள்நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றன.

ரோஹிங்யாக்களுக்கு குடியுரிமை மறுக்கும் மியம்மர்

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அந்நாட்டின் குடியுரிமையை வழங்க முடியாது என மியன்மர் அரசு மறுத்து வருகிறது. அதே போல் ரோஹிங்யாக்களை மியன்மர் நாட்டு குடிமக்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என அந்நாட்டின் பெரும்பான்மை பௌத்தர்களும் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் ரொஹிங்யாக்கள் வெளிநாடுகளின் இறக்குமதியாக அந்நாட்டுக்குள் வரவழைக்கப்பட்டவர்கள் அல்ல. 15 ம் நூற்றாண்டு முதல் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மார் – பர்மாவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன. அவர்களும் அந்நாட்டிற்குறியவர்கள் தான் என்பதற்கான ஆதாரங்கள் தேவைக்கதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையிருந்தும் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக ரோஹிங்யாக்களை அழிக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.

ஊடக வெளிச்சம் படாமல் நடைபெறும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்வதற்காக BBC செய்திச் சேவை மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் இவ்வாறு விபரிக்கிறது.

BBC செய்தியறிக்கை – 02.02.2017
பர்மா என்றும் அழைக்கப்படும் மியான்மரில் சிறுபான்மையினரான ரொஹிஞ்சா முஸ்லீம் பிரிவினர் மீது அத்துமீறல்கள் மற்றும் அட்டூழியங்கள் நடைபெற்றனவா என்பது குறித்து விசாரித்து வந்த அரசு நியமித்த விசாரணை குழுவின் இறுதி அறிக்கையின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரொஹிஞ்சா முஸ்லீம் பிரிவினர் அதிகம் வாழ்ந்து வந்த வடக்கு ரக்கீன் மாநிலத்தில் நுழைய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தங்கள் படையினர் குடிமக்களை பாலியல் வல்லுறவு செய்ததாகவும், கொலை செய்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக பதில் கூற மியான்மர் அரசு தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகின்றது.

இது குறித்து மேலும் அறிந்து கொண்டு தெரிவிக்க மியான்மரில் உள்ள பிபிசி செய்தியாளர் ஜோனா பிஷரை அனுப்பினோம்.

டிரம்ப் – ஆங் சான் சூசி இடையேயான பொதுவான அம்சம்
70 வயதின் ஆரம்பத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் மியான்மர் நாட்டு தலைவர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஆங் சான் சூசி ஆகிய இருவருக்கும் உள்ள ஒரு பொதுவான அம்சம் , அவர்கள் இருவரும் பத்திரிகையாளர்கள் குறித்த ஒரு வலுவான வெறுப்பு கொண்டிருப்பதாகக் கருதப்படுவதுதான்.

ஊடகங்களுடன் டிரம்ப் கொண்டுள்ள கொந்தளிப்பான உறவு குறித்து பல முறைகள் விரிவாக அலசப்பட்டுள்ளது. இதே போன்ற ஒரு விஷயத்தில் ஆங் சான் சூசி பெயரும் வருவது வியப்பாக இருக்கலாம்.

ஊடகங்களிடம் நெருக்கமாக உள்ளவரா ஆங் சான் சூசி?

தி லேடி என்று மியான்மரில் அழைக்கப்படும் ஆங் சான் சூசி, 1990-களில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் அடையாளமாக அறியப்பட்டு பிரபலமானவர்.
ரங்கூனில் ராணுவத்தால் கட்டாய வீட்டுச் சிறை வைக்கப்பட்ட சூசி, ராணுவத்தை எதிர்த்த தனது துணிச்சல் கதையை வெளியில் கூற, அவரை சந்திக்க முற்பட்ட பத்திரிக்கையாளர்கள் பல சவால்களையும், ஆபத்துக்களையும் எதிர் கொண்டனர்.
ஆனால், தற்போது ஆங் சான் சூசி பதவியில் இருக்கும் போது விஷயங்கள் முற்றிலும் வேறாக உள்ளன.

பர்மிய பத்திரிக்கைகளுக்கு எப்போதும் ஆங் சான் சூசி பேட்டி அளிப்பதில்லை. மியான்மர் நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தொடர்ச்சியான கேள்விகள் எதுவும் கேட்கப்படுவதில்லை. 14 மாதங்களுக்கு முன்னர் நடந்த தேர்தலுக்கு முன் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர முறையான பத்திரிக்கையாளர் சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை.

நாட்டின் அதிபரை விடவும் உயரிய பொறுப்பில், மக்களுக்கு அழைத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தனக்காக ஒரு சக்தி வாய்ந்த மற்றும் பலம் பொருந்திய அரசு ஆலோசகர் என்றறியப்பட்ட பொறுப்பை அவர் உருவாக்கினார்.

ரொஹிஞ்சா முஸ்லீம்களின் உண்மை நிலை என்ன?
தினசரி அடிப்படையில் பார்த்தால், மியான்மரில் இன ரீதியான சிறுபான்மையினரான ரொஹிஞ்சா முஸ்லீம் பிரிவினரின் நிலை குறித்து வெளிவரும் சர்வதேச ஊடக செய்திகளுக்கு மியான்மர் அரசால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மியான்மரில் ஏறக்குறைய ஒரு மில்லியன் (10 லட்சம்) ரொஹிஞ்சா முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர். பல தசாப்தங்களாக இவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த மூன்றரை மாதங்களாக வடக்கு ரக்கீன் மாநிலத்தில் வாழ்ந்து வருபவர்கள் கடுமையான ராணுவ ஒடுக்குமுறையை ஆளாக்கப்பட்டுள்ளனர்.

உண்மையில் அங்கு என்ன நடந்து வருகிறது என்பது ஒருபுறமிக்க, இவர்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ்ந்து வருவதாக அரசு கூறி வருகிறது. நீங்கள் எதை நம்ப வேண்டும் என்பது நீங்கள் தேர்ந்தெடுப்பதில் தான் உள்ளது.

மியான்மர் ராணுவம் இன அழிப்பு மற்றும் இனப் படுகொலையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய சிலரின் கூற்றுக்களை அந்நாட்டின் ராணுவம் மறுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஆங் சான் சூசி, போலீஸ் புறக்காவல் நிலையங்கள் மீது மோதலை முதலில் ஆரம்பித்த ரொஹிஞ்சா பயங்கரவாதிகளை பிடிப்பதற்காக எடுக்கப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை இதுவென குறிப்பிட்டார்.

ஆபூர்வமான ஒரு பேட்டி
இச்சூழலில், கடந்த வாரத்தில் ரக்கீன் மாநில அரசிடமிருந்து மோதல் நடந்த பகுதிகளுக்கு செல்ல இறுதியாக பிபிசிக்கு அனுமதி கிடைத்தது வியப்பான ஒரு அம்சம் தான்.
பல மணி நேர பயணம் மற்றும் காத்திருப்புக்கு பிறகு, எங்களை தடுத்து நிறுத்தும்படி அரசிடமிருந்து வந்த உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தினர். ஒரு உள்ளூர் அதிகாரி எங்களுக்கு ஒரு நேர்முக பேட்டி அளிக்க வந்ததே வெற்றியாக கருத வேண்டும்.
இதற்கு முன்னர் கடந்த அக்டோபர் மாத்த துவக்கத்தில் ரக்கீன் மாநிலம் மற்றும் ரொஹிஞ்சா முஸ்லீம்களின் உண்மை நிலை குறித்து நாம் பேச எடுத்த பல முயற்சிகளையும் ஆங் சான் சூசியும் அவரது பேச்சாளரும் மறுத்து விட்டனர்.

பேட்டி அளிக்க கோரி ஆங் சான் சூசியின் பேச்சாளருக்கு பல முறைகள் நாம் அனுப்பிய குறுந் தகவல்களுக்கு, தான் ஒரு கூட்டத்தில் இருப்பதாகவும், அலுவலில் இருப்பதாகவும் பதில் வந்தது.

பிபிசி செய்தியாளர் ஜோனா மற்றும் சூ சியின் பேச்சாளருக்கு இடையே நடந்த குறுந்தகவல் பரிமாற்றம்

அத்துமீறல் குற்றச்சாட்டுக்கள் உண்மையா? வதந்தியா?

வடக்கு ரக்கீன் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மருத்துவரான தான் ஹூடுட் யாவ், புத்த மதத்தை பின்பற்றும் ஒரு பர்மியவாசி ஆவார்.

அவருடன் பேசிய போது , மற்ற பர்மியர்களை போலவே ரொஹிஞ்சா முஸ்லீம்களின் மீது அத்துமீறல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுவது ஜோடிக்கப்பட்டது என அவர் நம்புகிறார்.
”இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. நாட்டில் நடப்பது குறித்த முழு உண்மைகளையும் அரசு வெளியிட்டு வருகிறது. பர்மிய புத்த முறை பாலியல் வல்லுறவை அனுமதிப்பதில்லை. இவை எல்லாம் வெறும் வதந்திகள்” என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால், இவை உண்மையா, வதந்தியா என்று நிரூபிப்பது மிகவும் சிரமம். மோதல் நடந்த இடத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் உதவி தொழிலாளர்களை அனுமதிக்காத சமயத்தில், அங்குள்ள நிகழ்வுகளை அரசு மட்டுமே வெளியிட்டு வருகிறது.
ஆங் சான் சூசியின் செயல்பாடுகளும், மியான்மர் அத்துமீறல்கள் குறித்த பிரச்சாரமும்
இந்த பிரச்சனை குறித்து ஆங் சான் சூசியின் செயல்பாடுகள் மீதான சந்தேகத்தின் பலனை, பிரிட்டன் போன்ற சில நாடுகள் அவருக்கு அளித்துள்ளன. சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்க போராடியவர் ஆங் சான் சூசி என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், மியான்மரின் நடைமுறையின் தலைவர் ஆங் சான் சூசி என்ற இந்த பதவியில் புதிதாக அமர்ந்துள்ளார் என்பதையும், அரசியலமைப்பு ரீதியாக அவர் நாட்டின் ராணுவத்தையோ அல்லது போலீஸ் துறையையோ கட்டுப்படுத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

முயற்சி செய்திருந்தாலும் ரக்கீன் மாநிலத்தில் நடக்கும் ராணுவ நடவடிக்கையை அவரால் தடுக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் மியான்மரின் மிகச் சிறந்த நம்பிக்கை ஆங் சான் சூசி தான்.
ஆனால், அவரின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சகங்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்டதாக கூறும் மக்கள் தெரிவிக்கும் கூற்றுக்களை குப்பையென ஒதுக்குகின்றனர். மேலும், பர்மிய ராணுவம் வெளியிடும் அத்துமீறல் மறுப்புக்களை இவர்களும் திரும்ப கூறுகின்றனர்.

கண் துடைப்பு விசாரணை அறிக்கையா?
மியான்மரின் ரக்கீன் மாநிலத்தில் சிறுபான்மை ரொஹிஞ்சா முஸ்லீம் பிரிவினருக்கு எதிராக நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை அறிக்கை வெளியீடை மியான்மர் அரசு ஒத்தி வைத்துள்ளது.

ஒரு முன்னாள் ராணுவ தளபதியின் தலைமையில் செயல்படும் இந்த விசாரணை ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விசாரணை அறிக்கை ஒரு கண் துடைப்பாக அமையலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு ரக்கீன் மாநிலத்தில் என்ன நடந்தது என்பது குறித்த உண்மைகள் எக்காலத்திலும் வெளிப்படுத்தப்படாமல் போகலாம்.
என்று BBC யின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

கொன்று எரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் – BBC செய்திக் குறிப்பு 10.03.2017

அதே போல் கடந்த 10.03.2017 அன்றைய பி.பி.சி செய்திச் சேவை ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பாக இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

மியன்மாரில் சுமார் பத்துலட்சம் ரோஹிஞ்சாக்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு அங்கே குடியுரிமை இல்லை. அடிப்படை மனித உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. வேண்டாத முஸ்லிம் சிறுபான்மையினரை பர்மிய இராணுவத்தினர் கையாளும் விதம் குறித்த தகவல்களை இரகசியமாக வைக்கவே பர்மிய அரசு முயல்கிறது. ஆனால் உலகின் பார்வையிலிருந்து பெருமளவு மறைக்கப்பட்ட மியன்மாரின் ரக்கைன் மாகாணத்திலிருந்து பிபிசிக்கு மாதக்கணக்கில் அதிரவைக்கும் காணொளிகள் வந்தபடி இருந்தன.
கடந்த ஆறுமாதங்களில் எழுபத்தைந்தாயிரம் பேர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் பலர் தற்போது வங்கதேசத்தில் தங்கியுள்ளனர். கொடூரமான கொலைகள், மோசமான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் தமக்கு இழைக்கப்பட்டதாக அவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் சொல்வதை ஹெலிகாப்டரிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் பிபிசி ஆராய்ந்தது. எரிந்த வீடுகளையும் ஏராளமான எரிந்த சடலங்களையும் அந்த காட்சிகள் காட்டின. பரவலான பாலியல் வல்லுறவுப் புகார்களும் கூறப்படுகின்றன. அரசாங்க புலனாய்வாளர்களிடம் ரோஹிஞ்சா பெண்களுக்கு நடந்த கொடுமைகளை தைரியமாக பேசியதன் மூலம் ஜமலிடா பேகம் மியன்மாரில் பிரபலமானார்.

சில மாதங்களுக்குப் பின் ஜமாலிடாவை பிபிசி வங்கதேசத்தில் சந்தித்தது.

புகைப்படத்தின்மூலம் இராணுவத்தினர் தன்னை தேடியதால் வங்கதேசம் தப்பி வந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.

நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு பலநூறுபேர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக ரோஹிஞ்சா அகதிகள் தெரிவிக்கும் புகார்கள் ஐநா தூதரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இவை மனித குலத்துக்கு எதிரான குற்றங்களென்றே தான் நம்புவதாக தெரிவித்தார் மியன்மாரிலுள்ள ஐநாவின் மனித உரிமைகளுக்கான சிறப்பு பிரதிநிதி யாங்கீ லீ. இவற்றுக்கு மியன்மார் தலைவி ஆங்க்சான் சூசியின் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்திய யாங்க் லீ, “இறுதியில் சிவில் அரசாங்கமே இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டும். சொந்த மக்கள் மீதே மோசமான சித்ரவதைகள், மனிதத்தன்மையற்ற குற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதற்கு அரசு தான் பதிலளிக்கவேண்டும்”, என்றார்.

ஆனால் இந்த விவகாரம் குறித்து மியன்மார் ஜனநாயகத்துக்கான முன்னாள் போராளியாக பார்க்கப்பட்ட ஆங் சான் சூசி பிபிசிக்கு பேட்டியளிக்க மறுத்துவிட்டார். விடாப்பிடியாக அவருக்கு நெருக்கமான தலைவர் ஒருவரிடம் பிபிசி பேசியது.

ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி பேச்சாளர் வின் டேன், இது மனித குலத்துக்கு எதிரான குற்றங்களென்று தாங்கள் நம்பவில்லை என்றும் இது உள்நாட்டு விவகாரமேயன்றி வெளிநாட்டு பிரச்சனையல்ல என்றும் பிபிசியிடம் தெரிவித்தார்.

நூற்றுக்கணக்கான ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டிருப்பதாக சொல்லப்படுவதையும் அவர் நிராகரித்தார். ஆங்சான் சூசி ஆட்சிக்கு வந்து ஏறக்குறைய ஓராண்டாகப்போகிறது. ஒரு காலத்தில் அவரோடு அடையாளப்படுத்தப்பட்ட கொள்கைகள், மதிப்பீடுகள் தொடர்பில் அவர் கடைபிடிக்கும் தற்போதைய மௌனமே ஆட்சி அதிகாரத்திற்கான அவரது விலையாக இருந்து வருகிறது.

என்று தெரிவித்துள்ள BBC குறித்த செய்தி பற்றி வெளியிட்டு வீடியோவின் ஆரம்பத்திலேயே “இதில் வரும் காட்சிகள் சிலரை சங்கடப்படுத்தலாம்”. என்றொரு அறிவிப்பையும் விடுத்துள்ளது. அந்தளவு பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் BBC உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளது.

-ரஸ்மின் MISc-


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.