பலூஜா... ஈராக்கின் மரணப்படுகுழி.



ஈராக்கின் சதாம் அரசு பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், அது மனித இனத்துக்கே ஆபத்து என்றும் அப்பட்டமாகப் புளுகிய அமெரிக்கா தனது புளுகு மூட்டைகளில் இருந்து பேரழிவு ஆயுதங்களை அவிழ்த்துவிட்டு ஈராக்கின் இடிபாடுகள், பிணக் குவியல்களுக்கு மேல் ஜனநாயகத்தை நிலைநாட்டியது.  

நெடுந்தொலைவில் இருந்து குண்டு வீசலாம், ஆனால், ஈராக்கின் எண்ணை வயல்களை எப்படி உறிஞ்ச முடியும்? ஈராக்கில் கால் பதிக்காமல் எண்ணை வளப் பிராந்தியத்தில் தன் ஆதிக்கத்தையும் தனது உலக மேலாதிக்கத் திட்டத்தையும் எப்படி நிறைவேற்ற முடியும்?  பீதியுடன் கால் பதித்த அமெரிக்கா, துரோகிகளின் பொம்மை அரசாலும், பிரித்தாளும் சூழ்ச்சியாலும் மட்டுமல்லாமல் தான் அடைந்த அதே பீதியை மக்களுக்கு ஏற்படுத்தும் பயங்கரவாத நடவடிக்கைகளாலுமே ஊன்றிய காலை உறுதி செய்துகொள்ள முயற்சித்தது.

அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான வீரஞ்செறிந்த ஈராக் மக்களின் சுதந்திர வேட்கை போராட்டமாக வெடித்துக் கிளம்பிய முதல் நகரம்தான் ஃபலூஜா.  ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு மேற்கே 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த நகரம் அது.  இங்கே அமெரிக்கா ஏப்ரல் 28, 2003ல் ஃபலூஜாவின் ஒரு பள்ளிக்கூடத்தை இராணுவ முகாமாக மாற்றத் தலைப்பட்டது. இருநூறுக்கும் மேலான மக்கள் உடனடியாகக் கூடி  இந்த முயற்சியை முறியடிக்கப் போராடினர்.  அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் தாறுமாறான துப்பாக்கி சூடு நடாத்தி 17 பேரைக் கொலை செய்தது.  அடுத்த இரண்டாவது நாளில் இந்த படுகொலையைக் கண்டித்துப் போராடிய மக்கள் மீது மீண்டும் அமெரிக்க சிப்பாய்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் மாண்டனர்.

இச்செயல் பரந்துபட்ட மக்களின் கோபாவேசத்தை மூண்டெழச் செய்தது. ஃபலூஜா அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டத்தின் மையமானது.  கொடூரமான போர்க் குற்றங்கள் பல செய்திருந்த ப்ளாக்வாட்டர் யூ.எஸ்.ஏ என்ற தனியார் கூலிப்படையின் அணி வரிசையை மார்ச் 31, 2004 அன்று வெகுண்டெழுந்த மக்கள் கூட்டம் ஒன்று தடுத்து நிறுத்தியது. ப்ளாக்வாட்டர் கூலிப்படையினர் நால்வர் வாகனத்தில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு அடித்து, எரித்து யூப்ரடீஸ் நதியின் பாலத்தில் தொங்கவிடப்பட்டனர். இது கண்ட தொன்மைச் சிறப்பு மிக்க யூப்ரடீஸ் நதி தான் ஊட்டி வளர்த்த நாகரீகம் மீண்டும் தழைக்கும் என்ற புது நம்பிக்கையில் மகிழ்ச்சி வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடியிருக்கும்.

அபரிமிதமான அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்துக்கு எதிராக ஃபலூஜா மக்கள் நடத்திய நெஞ்சுரம் மிக்க போராட்டங்களும், அடைந்த வெற்றிகளும் நாடெங்கிலும் மக்களால் கொண்டாடப்பட்டது, உலகத்தார் கவனத்தை எல்லாம் ஃபலூஜா தம் பக்கம் ஈர்த்துக் குவித்தது.  அமெரிக்க ஆக்கிரமிப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.

வெறிகொண்ட அமெரிக்க இராணுவத் தலைமையகம் பெண்டகன் நவம்பர், 2004-ல் அதற்கு எதிர்வினை ஆற்றியது. ஃபலூஜா சுற்றி வளைக்கப்பட்டது.  உள்ளிருப்போர் அனைவரும் எதிரிகள் என்று அறிவிக்கப்பட்டனர். நகரம் படுபயங்கரமான ஆயுதங்கள் தரித்த ஈவிரக்கமற்ற ஏராளமான இராணுவத்தினரின் விளையாட்டுக் களம் ஆக்கப்பட்டது.  தப்பி ஓட முயன்ற மக்கள் குடும்பத்துடன் மீண்டும் அந்த கொலைக் களத்தில் பிடித்துத் தள்ளப்பட்டனர் என்று எழுதியது அசோசியேடட் பிரஸ்.

பேரழிவு இரசாயன ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகப் புளுகிக்கொண்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்காதான் வெள்ளைப் பாஸ்பரஸ் என்ற இரசாயனப் பொருளை மிகப் பெரும் அளவில் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தியது. போர்க்களத்தை ஒளியூட்டவே வழக்கமாய் பயன்படுத்தப்படும் இந்த இரசாயனம் மரணத்தை விளைவிக்கும் பயங்கரமான இரணங்களை ஏற்படுத்தக் கூடியது. கதவுகள், சன்னல்கள் போன்ற கட்டுமானப் பொருட்கள், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மக்களின் உடைகள் என தன் வழிப்பட்ட தடைகள் அனைத்தையும் எரித்துக்கொண்டு முன்னேறி இறுதியில் மனிதத் தோலையும், உள்ளிருக்கும் எலும்பையும் தின்று செறிக்கும் அகோரப்பசி கொண்டது அந்த இரசாயனம்.

மக்கள் பதுங்கி இருக்கும் பாதுகாப்பான குடியிருப்புக் கட்டிடங்களின் உள்ளிருக்கும் பிராண வாயுவையும் உரிஞ்சி எடுத்துவிடும் தன்மை கொண்ட வெள்ளைப் பாஸ்பரஸ் இத் தாக்குதலில் ஏராளமாகப் பயன்படுத்தப்பட்டது.  இத்தோடு நில்லாமல் சொல்லொணாத் துயரைத் தலைமுறை தலைமுறைக்கும் விளைவிக்கும் கதிர்வீச்சுத் தன்மைகொண்ட ஏராளமான குண்டுகள் இந்த நகரத்தின் மீதான குவிந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன என்றும் அஞ்சப்பட்டது.

அமெரிக்க இராணுவத்தால் உயிருடன் பிடித்துச் செல்லப்பட்ட மக்கள் (1300-1500 பேர்) அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர்.  இதையே வேறு சொற்களில், “ஆயுதப் போராளிகள்” 1400 பேர் கொல்லப்பட்டனர் என்ற தனது அறிவிப்பின் மூலம் வெளிப்படுத்தியது அமெரிக்கா.  ஃபலூஜா மக்களைப் பழிவாங்கும் தனது நோக்கத்தை இந்த செயலின் மூலம் வெளிப்படுத்திக்கொண்டது. படுகாயமுற்றுப் பரிதாப நிலையில் இருந்த ஒரு ஈராக்கியரை அமெரிக்க சிப்பாய் ஒருவன் சுட்டுக் கொல்வதைப் NBC செய்தி படம் பிடித்திருந்தது. தனது பாதுகாப்பு கருதி செய்யப்பட்டதே இந்த செயல் என அமெரிக்க இராணுவ விசாரணை பின்னாளில் கண்டறிந்து கூறியது. சுய மரியாதையும், சுதந்திர வேட்கையும் கொண்ட மனிதன் உயிருடன் இருக்கும் வரை தனக்குப் பாதுகாப்பில்லை என்பதைச் சொல்ல ஒரு விசாரணை எதற்கு?

பத்து நாட்கள் நடந்த இந்த தாக்குதலில் 51 அமெரிக்க சிப்பாய்கள் இறந்தனர்.  நகரத்து மக்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது.  இத் தாக்குதலுக்கு முன்னதாக பல பத்தாயிரம் மக்கள், பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் நகரத்தை விட்டு வெளியேறினர். இந்த தாக்குதலுக்கு முந்திய ஃபலூஜாவின் மக்கள் தொகை 4 ¼ –  6 லட்சம்.  தற்போதைய ஜனத்தொகையோ வெறும் 2 ½  –  3 லட்சம் மட்டுமே இருக்கும் என அஞ்சப்படுகிறது.

இத் தாக்குதலில் நகரத்தின் கட்டிடங்கள் பாதிக்கு மேல் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன.  ஈராக்கின் பல பகுதிகளைப் போலவே ஃபலூஜாவும் இடிபாடுகளுக்கு இடையேதான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.  கழிவு நீர் வெளியேற்ற வழிகள் செயல்படவில்லை, குப்பைகள் தெருக்களில் மலையாய்க் குவிகின்றன.  குடிநீர் வினியோகம் மாசுபட்டு இருக்கிறது.  டி.பி., டைஃபாய்ட், கழிச்சல் நோய்களுக்கு ஏராளமான மக்கள் ஆளாகின்றனர். தாக்குதல் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பின்னும் இதுதான் நிலை. இதுவும் ஒரு தாக்குதல் தானே.

இத்தாக்குதலின் பின் ஃபலூஜா நகர மக்கள் புற்று நோய், லூக்கிமியா- இரத்தப் புற்று நோய், சிசு மரணம், பாலின மாறாட்டம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இந்த பாதிப்புகளின் அளவு 1945-ம் ஆண்டு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலில் தப்பிப் பிழைத்தோரிடம் காணப்படும் அளவை விடக் கூடுதலாக இருப்பதையும் பல ஆய்வுகள் வெளிப்படுத்தி நின்றன

அணுவுலை எரிபொருட் கழிவு என அறியப்படும் திறன் குறைந்த யுரேனியத்தையே அமெரிக்க இராணுவம் கவசங்கள், பதுங்கு குழிகளைப் பிளக்கும் குண்டுகளிலும், தோட்டாக்களிலும் பயன்படுத்துகிறது.  இதன் வெடிப்பின்போது 40 சதவீதத்துக்கும் மேலான யுரேனியம் மீசிறு அணுத்துகள்களாக வெளிப்படுகிறது.  இது தாக்கப்பட்ட பகுதிவாழ் மக்களின் இரத்த ஓட்டத்தில் எளிதில் புகுந்து நிணநீர் சுரப்பிகளில் தங்கிவிடுகிறது.  அது வயதுவந்தோரின் விந்தணுவிலும், கருமுட்டையிலும் உருவாகும் மரபணுக் குறியீடுகளை (DNA) தாக்கி அடுத்த தலைமுறையினருக்கு பாரிய பிறவிக் கோளாறுகளை உண்டுபண்ணுகிறது.

இத்தகைய பாதிப்பால் விகாரமான பிறப்புகள், சிசு மரணம், பிறவிக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய்களின் எண்ணிக்கை செங்குத்தாய் உயர்ந்து நிற்பதும் தலை இன்றி முண்டமாகவும், இரு தலைகளுடனும், நெற்றியில் கண்ணுடனும், கைகால்கள் அற்ற முடமாகவும், இன்னபிறவாகவும் விகாரமாகப் பிறக்கும் ஏராளமான குழந்தைகளைக் காணச் சகியாது ஃபலூஜாவின் பெண்கள் பிள்ளைப் பேற்றை நினைத்து அரண்டு போயிருக்கிறார்கள்.

எண்ணை திருடன் அமெரிக்காவால்
ஃபலூஜாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நமது காலத்திய படுமோசமான போர்க் குற்றங்களில் ஒன்று.  இவ்வித நடவடிக்கை அதிர்ச்சியூட்டும் எச்சரிகை அல்லது  கூட்டுத் தண்டனை என அழைகப்படுகிறது. இது சட்டப்படி ஒரு போர்க் குற்றம்.

அமெரிக்க பயங்கரவாதம் உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியது.  ஆனால், உலகம் இன்னும் விழித்தபாடில்லையே.  ஃபலூஜாவின் படுகொலைக்குத் திட்டமிட்டவர்களுள் முதன்மையானவன் ஜென்ரல் ஜேம்ஸ் “மேட்- டாக்” மேட்டிஸ்.  2005-ல் ஒரு பொது நிகழ்வில் ”கூக்குரலிடும் கோட்டான்களின் நரகம் அது .. அங்கு சில நபர்களைச் சுட்டுத் தள்ளுவது ஜாலியான விசயம்” [it’s fun to shoot some people…. You know, it’s a hell of a hoot] என்று கொலை செய்வதில் தனக்குள்ள உவகையைத் தோளை உலுக்கிக்கொண்டு சர்வ அலட்சியமாக வெளிப்படுத்தியது அந்த வெறி நாய்.

இரண்டாம் உலக யுத்தம் முடிவுபெறும் தருவாயில், 1945 ஆகஸ்ட், 6-8 தேதிகளில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசி, யுத்தத்தின் ஊற்றுக்கண் வற்றிவிடவில்லை; ஹிட்லர் இடம் பெயர்ந்திருக்கிறான், இறந்துவிடவில்லை என்று உலகுக்கு அறிவித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். அன்று தொட்டு இன்று வரை அழிவை தவிர வேறொன்றையும் இப்புவி கண்டுகொள்ளவில்லை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.