சில வேதனையான உண்மைகள்... ( கட்டாயம் இதனை வாசிக்கவும்)சில வருடங்களுக்கு முன்பு கொழும்பில் கோலோச்சும் இஸ்லாமியர் ஒருவருக்குச் சொந்தமான பிரபல ஆடை வர்த்தக நிலையத்தின் கிளை ஒன்றை மாத்தறை நகரில் நிறுவ ஏற்பாடாகி இருந்தது.அடடா !எங்கிருந்தோ வீறு கொண்டு எழுந்தார்கள் கலாச்சாரக் காவலர்கள்.

கண்ட இடமெல்லாம் போஸ்டர்கள் ,மக்கள் புழங்கும் இடமெல்லாம் சுவரொட்டிகள்,அவைகளில் என்ன அமர காவியங்களா படைக்க முடியும் ? பெரிசாய் ஒன்றும் இல்லை." இஸ்லாமியர் கடையைப் புறக்கணி" என்ற திருவாசகம் எழுதப்பட்டு இருந்தது.எந்தளவுக்கு என்றால் குக் கிராமங்களுக்கு எல்லாம் போய் பறை அடித்து செய்தி சொல்லப்பட்டது..

மாத்தறையில் குறித்த கடையின் திறப்பு நாளும் வந்தது..திமு திமு என்று குவிந்தது மக்கள் கூட்டம்.'என்னவோ, ஏதோ விபரீதமாய் நடந்து தொலைக்கப் போகிறது ' என்று பயந்து தொலைத்த வேளை அந்த அதிசயம் நிகழ்ந்தது.1989 இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் ஒன்றாய்க் கலந்தது போல வெளியே இருந்த சனம் எல்லாம் உள்ளே போய் அங்கிருந்த சேல்ஸ் மேன்களுடன் ஒன்றிப் போனது.ஒரு நெகடிவ் ப்ரமோஷன் ஏற்படுத்திய எதிர்மறை விளைவு இது.

அன்றைய ஆட்சியில் துருப்பிடித்துப் போன இதே கோஷங்கள் மீண்டும் தூசு தட்டப்பட்டு பொலிவாக்கப்பட்டு ஒரு ரவுண்டு வந்து கொண்டு இருக்கின்றன.'இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களில் சிங்களப் பெண் பிள்ளைகளுக்கு ஒருவித டொபி வழங்கப்படுவதாகவும் அதைச் சாப்பிட்டால் வாழ்நாளில் கர்ப்பமே தரிக்காது' போன்ற பிரம்மாண்ட அபத்தங்கள் இங்கே பதிவுகளாக எழுதப்பட்டு இலட்சக்கணக்கான லைக்ஸுகள் கண்கின்றன..

பண்டிகைக் காலத்தை மட்டும் நோக்கமாய்க் கொண்டு விதைக்கப்படும் இந்த நச்சுவிதைகளுக்கு உரமாக சிங்களப் பெரு வர்த்தக நிலையங்களின் முதலாளிகள் இருக்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவு.அதற்கேற்றாற் போல அவர்களின் பிரபலமான வர்த்தக நிலையங்களும் தேசம் எங்கும் வியாபித்து இருக்க பீல்டில் இறங்கி ஜெயிக்க வதந்திகள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கின்றன.

ஒரு பொய் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் போது உண்மையாகிறது என்ற கோயபெல்ஸ் தியரிக்கு ஏற்பட்ட இம்முறை சேதாரம் அதிகம்..அநேகமான நகரங்களில் இந்தப் பேதி மாத்திரைகள் வேலை செய்ய இம்முறை இஸ்லாமிய வர்த்தக நிலையங்களில் வியாபாரம் பாரிய சறுக்கலைச் சந்தித்து இருக்கிறது..

இதே போன்று ஒரு பைத்தியகாரத்தனம் சில மாதங்களுக்கு முன்பும் அரங்கேறியது.எடிசலாட் நிறுவனம் ஏதோ ஸ்ரீபாத மலையைப் பெயர்த்து எடுத்து எமிரேட்ஸ் ப்ளைட்டில் ஏற்றி டுபாய் கொண்டு செல்லப் போகிறது என்ற ரேஞ்சுக்கு அறிவுக் கொழுந்துகள் பட்டையைக் கிளப்ப,எடிசலாட் சிம்கள் எல்லாம் உஷார் மடையர்களால் அடித்து நொறுக்கப்பட்டன..

இத்தனைக்கும் பில்லியன்கணக்கில் சொத்துக்களைக் கொண்டு இருக்கும் உலகின் முதல் தர தொலை தொடர்பு நிறுவனம் அது..இலங்கையை விட்டுச் செல்வதால் இலங்கை அரசுக்குத்தான் பாரிய வரி இழப்பு ஏற்படுமே ஒழிய எடிசலாட்டுக்கு அல்ல.

அந்நிய முதலீடுகள் எல்லாம் கானலாகிப் போன தேசத்தில் , இருக்கின்ற முதலீடுகளையாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

மக்களின் வாழ்வாதர நெருக்கடிகள் தலைதூக்கும் போது ஆட்சியாளர்களின் கள்ள ஆசீர்வாதத்துடன் , இனவாத வர்த்தகர்கள், சூப்பர்வைஸர்களாய் வேடிக்கை பார்க்க காலத்திற்கு காலம் கிளறிவிடப்படும் இந்த நாசகாரத்தனத்தால் இந்த நாட்டில் முதலீடு செய்ய ஒரு வெளிநாட்டுப் பயல் வரப்போவதில்லை.

கலவரங்களுக்கு தூபம் இடும் ஆரம்ப நடவடிக்கைகள் எல்லாம் கடையடைப்பிலும் புறக்கணிப்பிலுமே தொடங்குகிறது.

இத்தனை களேபரத்திற்கு மத்தியிலும் ஜனாதிபதி என்ற பரிதாப பிதா என்ன செய்கிறார் என்று புரியவில்லை.

மகிந்த காலத்தைப் போன்று சோனக அமைச்சர்கள் எல்லாம் எமக்காய் பேயாய் உழைக்கின்றனர்.கருமம், எமக்கு அவை புரிவதில்லை...

- ஸபர் அஹ்மத் -
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.