மறப்பன மறப்பது மாண்புநல்லது அல்லாததை அக்கணமே மன்னித்து மறப்பன மறப்பது மனிதநேய மாண்பு. மறக்காது நினைத்து கொண்டேயிருந்தால் நீண்ட பகை புகைந்து வளர்ந்து பழிவாங்க வகை செய்யும்; உறவுகள் முறியும்; முரணான செயல்களால் விவகாரங்கள் முற்றி சற்றும் எதிர்பாரா சண்டைகள் உருவாகும்; சமுதாய நல்லிணக்கம் மறைந்து நாட்டிற்கும் கேடு விளையும்.

மன்னித்த பிறகு மன்னித்த செயலை மனதில் பதிக்காது மறக்க வேண்டும். மன்னித்த பிறகு மனதில் இம்மியளவும் அந்த நினைவு நிழலிட கூடாது என்பதை குர்ஆனின் 2-178 ஆவது வசனம், ""கொலையாளியை மன்னித்தபின் அக்கொலையை மறக்க வேண்டும்.

கொலையாளியை துன்புறுத்தக் கூடாது'' என்று கூறுகிறது. அறிவீனர்களின் அடாவடி செயல்களை மன்னித்து புறக்கணித்து நன்மையை ஏவ நவில்கிறது நற்குர்ஆனின் 7-199 ஆவது வசனம். மன்னிப்பு கோருபவர்களை அல்லாஹ் வேதனை செய்ய மாட்டான் என்ற செம்மறை குர்ஆனின் 8-33 ஆவது வசனமும் பாவங்களை மீண்டும் செய்யாது மறந்துவிட வேண்டும் என்று எச்சரிக்கிறது.

கொப்பளிக்கும் கோபம் கொலையில் முடிவதும் உண்டு. எனவே சீறும் சினம் மீறாது மறக்க வேண்டும். பிறரின் பிறழும் செயல்கள் நமக்குக் கோபம் உண்டாக்கும் பொழுது மன்னித்து மறக்க சொல்கிறது மாமறை குர்ஆனின் 42-37 ஆவது வசனம்.

"நம்பிக்கையுடையோர் பிறரின் தகாத செயல்களால் சினமுறும் பொழுது கோபம் ஊட்டியவரை மன்னித்து விடுவர். இதனை ஒட்டிய இனிய நபி (ஸல்) அவர்களின் கனிந்த மொழி, ""எவர் இப்புவியில் பிறரின் குறைகளை மறந்தும் மன்னித்தும் விடுகிறாரோ அவரின் குறையை இறைவன் மறுமை நாளில் மறைத்து விடுவான்'' அறிவிப்பவர் அபூஹீரைரா (ரலி) நூல் -முஸ்லிம்.

வீட்டில் குடும்பத்தில் மனைவி குழந்தைகளால் கொதித்து கோபமுற்று பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு. தவிர்க்க முடியாதது. இதனை, "வீட்டுக்கு வீடு வாசல்'' என்ற வாய்மொழி வழக்கு சொல் உறுதிப்படுத்துகிறது. இதுபோன்ற இல்ல நிகழ்வுகளையும் மன்னித்து மறக்க சொல்கிறது நல்லுரை நல்கும் குர்ஆனின் 64-14 ஆவது வசனம் ""மனைவி மக்களின் குறைகளைச் சகித்து மன்னித்து மறந்தால் அல்லாஹ்வின் மன்னிப்பையும் அருளையும் பெறலாம்'' ""கணவன் மனைவி இருவரில் எவரேனும் மற்றவருடைய ரகசியத்தை வெளியில் உரைக்காது மறைக்க வேண்டும்'' என்ற உத்தம நபி (ஸல்) அவர்களின் சத்தியவாக்கைச் சாற்றுபவர் -ஆபூஸ்ஈத் (ரலி) நூல் முஸ்லிம், அபூதாவூத். ஒன்றை மறக்க வேண்டும் என்றால் மாறான அச்செயலை மறக்க வேண்டும் என்பதே பொருள். "கருமித்தனமும் கஞ்சத்தனமும் வாழ்க்கையில் கடைப்பிடிக்காது மறக்கப்பட வேண்டியவை'' என்ற மா நபி (ஸல்) அவர்களின் மணிமொழியைக் கூறுகிறார் அலி (ரலி) நூல் புகாரி, முஸ்லிம, அபூதாவூத், திர்மீதி. கருமித்தனமும் கஞ்சத்தனமும் கயமைக்கு இழுத்துச் சென்று பழிப்புக்கு உள்ளாகும் பகை குணங்கள்.

"ஒருவரிடம் கேட்டதை அதன் உண்மை அறியாது பிறரிடம் கூற கூடாது'' அறிவிப்பவர் -அபூஹுரைரா (ரலி) நூல் முஸ்லிம். ஒருவரிடம் கேட்ட செய்தியின் உண்மையை அறியவேண்டும். உண்மையை அறிய முடியாவிட்டால் அதனைப் பிறரிடம் கூறாது மறக்க வேண்டும். மறக்காமல் ஊர் முழுவதும் பரப்புவதே வதந்தி. இந்த வதந்தியால் விளைந்தவை விபரீதங்களே. இன்று முகநூலில் வரும் இதுபோன்ற செய்திகளைப் பிறருக்கு அனுப்பி அவதிக்கு ஆளானோர் அதிகம். அவர்களே இந்நீதியை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

"இறந்தவரின் எலும்பை உடைப்பது உயிரோடு இருப்பவரின் எலும்பை உடைப்பது போலாகும்'' என்ற பெருமானார் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியைப் புகல்பவர் ஆயிஷா (ரலி) நூல் முஅத்தா, அபூதாவூத். ஒருவர் இறந்தபின் அவர் செய்த குற்றங்களை அவரின் குறைகளைப் பேச கூடாது; மறந்துவிட வேண்டும் என்பதே இப்பொன்மொழியின் பொருள். இப்பொன்மொழியை இன்னும் விளக்கமாக ""மரணித்தவர்களைத் திட்டாதீர்கள்'' என்று மாநபி (ஸல்) அவர்கள் மொழிந்ததை மீண்டும் ஆயிஷா (ரலி) அறிவிப்பது புகாரியில் உள்ளது.

"பிறரின் துன்பம் கண்டு மகிழ கூடாது. அல்லாஹ் அவரின் துயரைப் போக்கி மகிழ்ந்தவனைச் சோதித்து விடுவான்'' என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை எடுத்துரைக்கிறார் வாதிலாபின் அல் அஸ்கவு (ரல்) நூல் திர்மீதி. இந்த எச்சரிக்கை "புறம் கூறி குறை பேசி திரிவோருக்குக் கேடுதான்'' என்ற குர்ஆனின் 104 -1 ஆவது வசனத்தை ஆதாரமாய்க் கொண்டே அறிவிக்கப்பட்டது.

புகழுக்காக செயல்படுவதை மறக்க வேண்டும். அது இம்மையில் புகழ் தந்தாலும் மறுமையில் வெறுமை ஆகிவிடும். "மறக்க வேண்டியதை மறக்காது குத்திக்காட்டி, சபித்து, சங்கடப்படுத்தி பேசுவது கூடாது'' என்ற கோமான் நபி (ஸல்) அவர்களின் கூற்றை அறிவிக்கிறார் அப்துல்லாஹ்பின் மஸ்வூது (ரலி) நூல் -திர்மிதீ.

மறப்பன மறந்து மனித நேய மாண்புடன் வாழ்வோம். புனிதன் அல்லாஹ்வின் பூரண அருளைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.