அமைச்சர் காமராஜ் மீது போலீஸ் வழக்கு ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.30 லட்சம் மோசடி:ரூ.30 லட்சம் மோசடி செய்த புகாரில்  அமைச்சர் காமராஜ், அவரது மைத்துனர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது ஜாமீனில்  வெளிவர முடியாத பிரிவின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருவாரூர்  மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கீழவாளாச்சேரி செட்டிதோப்பு பகுதியை   சேர்ந்தவர் எஸ்.வி.எஸ் குமார். ரியல் எஸ்டேட் அதிபர். தனது சென்னை வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவரை   காலி  செய்வதற்காக அமைச்சர் காமராஜிடம் கடந்த 2011ம் ஆண்டில் ரூ.30 லட்சம்  கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், வீட்டை காலி செய்து கொடுக்காததால்,  பணத்தை கேட்ட குமாருக்கு, அமைச்சர் தரப்பிலிருந்து  கொலை மிரட்டல்  விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மன்னார்குடி போலீசில் குமார் புகார்  அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பின்னர் உச்ச நீதிமன்றத்தில்   மனுதாக்கல் செய்திருந்தார். அதன்படி,காமராஜ் மீது வழக்கு பதிவு செய்து, மே  8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக மன்னார்குடி  டி.எஸ்.பி.  அலுவலகத்தில் நேற்று முன்தினம் குமார் ஆஜராகவேண்டும் என்று சம்மன்  அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.
இதனிடையே, அன்றிரவு  தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு குமார் அளித்த பேட்டியில், `உச்ச நீதிமன்ற  உத்தரவுபடி காமராஜ் மீது வழக்கு பதிவு செய்யாமல் என்னை (குமார்) ஏன்  விசாரணைக்கு அழைக்க வேண்டும். எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால்  போலீசார்  முன்பு ஆஜராகவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

 இதனையடுத்து, அன்றிரவு  அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மைத்துனர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும்  இந்திய தண்டனை சட்டம் 420 (மோசடி) மற்றும் 506 (1) (மிரட்டல் விடுவது)  ஆகிய பிரிவுகளின்கீழ் ஜாமீனில் வெளி வர முடியாதவாறு போலீசார் வழக்கு பதிவு  செய்துள்ளனர்.
இதில் ராமகிருஷ்ணன் முதல் குற்றவாளியாகவும், காமராஜ் 2வது  குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம்
தமிழக அரசு அமைச்சர் காமராஜ் மீதான மோசடி புகார் வழக்கில், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம் வழங்கப்பட்டது. அதில்,‘அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல்நிலையத்தில் 420 மற்றும் 506 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மனுதாரரான எஸ்விஎஸ்.குமார் இதுவரை இந்த புகார் சம்பந்தமாக காவல்நிலையத்துக்கு நேரில் வரவே இல்லை. அதனால் தான் அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஆனது’ என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதால், அமைச்சர் காமராஜ் மீதான மோசடி புகார் குறித்த முழு விவரங்களையும் அன்று தாக்கல் செய்வோம் எனவும் அந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.