அதிரையில் காஸ் சிலிண்டர் வெடித்து பெரும் தீ விபத்து 50 வீடுகள் தீக்கிரை ( படங்கள் ) தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறி அடுத்தடுத்து உள்ள 50 வீடுகள் எரிந்து நாசமாகியது. சேத மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.

அதிராம்பட்டினம், கடலோரப்பகுதியான கரையூர் தெருவில் மீனவர்கள் பலர் குடிசைகளில் வசிக்கின்றனர். இப்பகுதியை சேர்ந்தவர் மருதையன் (50). இவரது வீட்டில் நேற்று  திங்கட்கிழமை பிற்பகல் திடீரென பலத்த சப்தத்துடன் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறி தீ பற்றி பரவியது.

வறண்ட அனல் காற்று வீசியதால் தீ பரவியது:
அப்போது அதிராம்பட்டினத்தில் வறண்ட அனல் காற்று பலமாக வீசியதால், அடுத்தடுத்து உள்ள வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியது. இதில் சுப்ரமணியன், மாரிமுத்து, முருகன், முனியாண்டி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் வீடுகள் உட்பட மொத்தம் 50 வீடுகள் எரிந்து நாசமாகியது. தீயில் வீடுகளில் இருந்த குடும்ப அட்டைகள், ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், காப்பிடு அட்டைகள், மீனவர் அடையாள அட்டைகள், பள்ளி புத்தகங்கள் உட்பட வீட்டு உபயோகப்பொருட்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியது. மேலும் மீனவர்களின் பல லட்சம் மதிப்பிலான வலைகள் உட்பட இயந்திர உபகரணங்கள் அனைத்தும் தீக்கரையானது. தீயில் சிக்கி 5 ஆடுகள் பலியாயின. தீ விபத்தில் வீட்டின் சுவர்கள் இடிந்து கீழே சாய்ந்தன. அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், சுமார் 1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் ஆறுதல்:
தகவலறிந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ம.கோவிந்தராசு, வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

அப்பகுதியிலிருந்து எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அருகிலுள்ள குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்தில் வீடுழந்த குடும்பங்கள் அருகில் உள்ள புயல் பாதுகாப்பு மைய கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

பட்டுக்கோட்டை ஏஎஸ்பி அரவிந்த் மேனன் தலைமையில் அதிராம்பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

சி.வி சேகர் எம்.எல்.ஏ ஆறுதல்:
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ சம்பவ இடத்தை பார்வையிட்டு, பாதிப்படைந்த பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அதிமுக அதிரை பேரூர் செயலாளர் ஏ.பிச்சை மற்றும் அதிமுகவினர் உடன் இருந்தனர்.

திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், அதிரை பேரூர் முன்னாள் தலைவர் எஸ்.எச் அஸ்லம் உள்ளிட்ட தலைவர்கள் தீ விபத்து பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பாதிப்படைந்த பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

கிராம பஞ்சாயத் சார்பில் ரூ. 1 லட்சம் நிதி உதவி:
தீ விபத்தில் பாதிப்படைந்த 50 குடும்பங்களுக்கு கரையூர் தெரு கிராம பஞ்சாயத் சார்பில் தலா ரூ 2 ஆயிரம் வீதம், ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

புதிய வீடுகள் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை:
தீ விபத்தில் மீனவர்களின் பெரும்பாலான குடிசை வீடுகள் எரிந்து நாசமாகியது. இதனால் மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் புதிய வீடுகள் கட்டித்தரவும், வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.