முத்துப்பேட்டை பேரூராட்சியில் குளம், கடைகள் ஏலம் அதிகாரிகளுடன் ஏலதாரர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏலம் ஒத்திவைப்பு(படங்கள்)திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில்  பேரூராட்சி பராமரிப்பில் உள்ள நீர்நிலை குளங்கள், பயனுள்ள மர மகசூல், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் ஆகியன நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே 4 முறை ஏலம் அறிவிக்கப்பட்டு நிர்வாக காரணங்களுக்காக  ஒத்திவைக்கபட்டிருந்தது. 5வது முறையாக பொது ஏலம் நேற்று அறிவிக்கபட்டதை தொடர்ந்து ஏலதாரர்கள் பலர் காலை முதலே பேரூராட்சியில் குவிந்தனர். காலையில் நீர்நிலை குளங்கள் ஏலம் விடபட்டன. மொத்தமுள்ள 43 குளம், குட்டைகளில் நீரின்றி வறண்டிருந்த  சேத்துகுளம் உட்பட 5 குளங்களை தவிர மற்றவைகள் ஏலதாரர்களால் ஏலமெடுக்கபட்டன.

ஆனாலும் அனைத்து குளங்களும் குறைந்த தொகைக்கே ஏலம் போனது.
இந்நிலையில் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள 17 கடைகளை ஏலமெடுக்க கடும்போட்டி நிலவியது. ஏலதாரர்கள் சிலர் தங்கள் கடைகளை ஏலமெடுக்க தங்கள் ஆதரவாளர்களுடன் திரண்டு வந்திருந்தனர். இந்நிலையில் பேரூராட்சி  பராமரிப்பில் உள்ள கடைகளை சிலர் ஆக்கிரமித்து தங்கள் பிடியில் வைத்துள்ளனர். வாடகை பாக்கியும் நிலுவையில் உள்ளது. இதனால் ஏலம் எடுப்பதில் பிரச்னை ஏற்படலாம். எனவே அனைத்து கடைகளையும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்ட பிறகே ஏலம் விடவேண்டுமென ஏலதாரர்கள் சிலர் பேரூராட்சி  நிர்வாகிகளிடம் வலியுறுத்தி மனு அளித்தனர். இதுகுறித்து தஞ்சை பேரூராட்சி  மண்டல இயக்குனருக்கும் தகவலளித்தனர். ஆனாலும் கடைகள் ஏலம் விடப்படுமென பேரூராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏலதாரர்களைவிட அவர்களுடன் வந்திருந்த ஆதரவாளர்கள் கூட்டம் அதிகமிருந்ததால் கடைகள் ஏலத்தின்போது மோதல் ஏற்படும் சூழ்நிலையும் இருந்தது.

இதனால் இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் நிர்வாகிகள் தனி அறையில் ஆலோசனை நடத்தினர். அப்போது அதிகாரிகளை சூழ்ந்த ஏலதாரர்கள் சிலர் கடைகள் ஏலத்தை ஒத்திவைக்க வேண்டுமென  கோரினர். இதற்கு  அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும்  பேரூராட்சி நிர்வாகம் அறிவித்தபடி கடைகள் ஏலத்தை இன்றைக்கே நடத்த வேண்டுமென வாக்குவாதத்தில் இறங்கினர். இதனையடுத்து அங்கிருந்தவர்களிடையே பேச்சுவார்த்தை முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த பேரூராட்சி அதிகாரிகள் கடைகள் ஏலத்தை மறு தேதி குறிப்பிடாமல் தடாலடியாக ஒத்திவைத்தனர். மேலும் இதுகுறித்து நோட்டீஸ்சும் ஒட்டினர். இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அங்கிருந்தவர்களை உடனடியாக அப்புறப்படுத்தி அமைதியேற்படுத்தினர்.

இது குறித்து பேரூராட்சி செயல்அலுவலர் உமாகாந்தன் கூறுகையில்,குளங்கள் ஏலம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே போனது. பேரூராட்சிக்கு நான்கில் ஒருபங்கு தான் வருவாய் கிட்டியுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள 17 கடைகளின் ஏலம் தற்காலிகமாக ஒத்திவைக்கபட்டுள்ளது. இந்த கடைகளின் குறித்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளபட வேண்டியுள்ளது. வாரச்சந்தை பகுதியில் உள்ள பேரூராட்சி கடைகள் மறுபதிவு செய்யப்பட்டுவிட்டன. அதனால் அந்த கடைகள் பொதுஏலத்தில் கொண்டு வரப்படவில்லை என்றார்.

போக்குவரத்து பாதிப்பு

ஏலதாரர்கள் ஆதரவாளர்களை அழைத்து வந்த கார்கள் மற்றும் பைக்குகள்  பேரூராட்சி அலுவலக வாசலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் அங்கு  போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அந்த இடத்தை கடந்து செல்ல முடியாமல்  வாகனங்கள்  திணறின.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.