புனித ரமழான் மாதம்: சில நிகழ்வுகள்இஸ்லாத்தின் கட்டாய கடமைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கோணங்களில் முக்கியத்துவமும் ஈருலக பாக்கியங்களும் நிறைந்ததாக அமைந்திருப்பது அவற்றின் சிறப்புக்களில் ஒரு பகுதியாகும். அத்தகைய கடமைகளுள் ஒன்றான புண்ணியங்கள் நிறைந்த கண்ணிய ரமழானில் இருக்கின்றோம். ஆயினும் அது வழங்குகின்ற வளமான வாழ்வில் எம்மை உட்படுத்திக்கொள்வதன் மூலம் எம்மை நாம் வளப்படுத்திக்கொள்ளலாம்.
”விசுவாசம் கொண்டவர்களே உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. (அதனை நோற்பதன் மூலம்) நீங்கள் பயபக்தி உடையவர்களாக ஆகலாம்.” (குர்ஆன் 02:183)

இவ்வசனத்தின் மூலம் உபவாசம் புரிகின்ற வழக்கம் நபி ஆதம் (அலை) அவர்கள் காலந்தொட்டு இருந்துவருகின்ற ஒன்றென்பது புலனாகின்றது. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அனுஷ்டிக்கின்ற முறைமைகளுக்கு அது வேறுபட்ட போக்கினைக் கொண்டிருந்தது.

குறுகிய நாட்களையும் சில விஷேட நாட்களையும் குறிப்பாக்கி விரதம் பேணப்பட்டதும் உணவுகளை உட்கொள்ளாத வகையிலும் மற்றவர்களிடம் பேசாது மௌனித்து இருத்தல் போன்ற வகைகளிலும் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்திற்கு முந்தியவர்களின் வழிமுறையாக இருந்தன என்பதை இஸ்லாமிய மூலாதாரங்களிலிருந்து விளங்கக்கூடியதாய் இருக்கின்றது.

”அஸ்ஸவ்மு” என்ற அரபிச் சொல்லிற்கு “தடுத்தல்” என்ற ஒரு பொருளும் உண்டு. பொதுவாக நோன்பு என்று இதை அழைப்பதை பெரும்பாலான மக்கள் நீண்டகாலமாக கைக்கொள்கின்ற ஒன்றாகவும் காணப்படுகின்றது. இது மூல அரபிச்சொல்லிற்குரிய பொருள்களில் ஒன்றுமாகும். அதிகாலை தொடக்கம் மாலை வரை உண்ணல், குடித்தல், புகைத்தல், புணருதல், பொய் பேசுதல், கோள் மூட்டுதல், புறம்பேசுதல் போன்ற காரியங்களைத் தவிர்த்து இருப்பதை அஸ்ஸவ்மு – தடுத்தல் எனும் சொல் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

“நீங்கள் (நோன்பின் மூலம் அடைந்திடும் பயனை) அறிவீர்களாயின், நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்ததாகும்.” (குர்ஆன் 02:184)

ரமழான் மாதத்தில் ஒவ்வொரு தினமும் நமக்கு வெகுமதிகளையும், படிப்பினைகளையும் உணர்த்தி நம்மை உயர்த்திவிடுகின்றது. பொறுமையின் அவசியத்தையும் அதனைப் பேண வேண்டிய பக்குவத்தையும் போதிக்கின்றது. நோன்பொரு கேடயமாக நமக்கு பயன்படுகின்றது. தீய காரியங்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க உதவுகின்றது. இதனால் நரக விடுதலை பெற்றுக்கொள்ளவும் வழியாகின்றது.

உபவாசம் பூணுவதால் அல்லாஹ்வின் மீது பற்றும் அச்சமும் பிறக்கின்றன. உணவைச் சிறிது காலம் குறைத்துக் கொள்வதால் மனதில் உருவாகும் ஆணவம், அகந்தை போன்ற தவறான எண்ணங்கள் அகன்று அகம் தூய்மை பெறுகின்றது.

இறையச்சவுணர்வு எவ்வளவு தூரம் நம்மை ஒட்டி உறவாடுகின்றதோ அவ்வளவு தூரம் நமது வாழ்வில் தூய்மையும், நேர்மையும், உண்மையும் இணைந்திருக்கும். இதனால், நேர்வழி வாழ்வு முறைமைகளும், நல்லவர்கள் என்ற சான்றுரைகளும் உறுதியாக சூழ்ந்து கொண்டிருக்கும். ஆகவே, மனிதனின் அகம், புறம் என்ற இரு பக்கங்களும் ஆத்மிக வெளிச்சத்தைக்கொண்டு இலங்கும். உளப்பரிசுத்தம், உடல் ஆரோக்கியம், பொருள் சுத்தம் என இதன் பயன்கள் பரந்தளவில் நம்மை வந்தடைகின்றன.

இறையடக்கம், நாவடக்கம், இச்சையடக்கம் போன்ற பண்பில் ஒரு நோன்பாளி தன்னை உட்படுத்திக்கொள்கின்றார். பொறுமை எனும் பொக்கிஷத்தை உறுதியாக கடைப்பிடித்துக்கொள்கின்றார். பசி, தாகம் போன்ற தேவைகளைச் சிறிது நேரம் புறக்கணித்து, இறைதிருப்தியை மட்டுமே ஆதரவு வைக்கின்றார். அதுமட்டுமன்றி அடுத்தவர்களின் பசி, தாகம், இச்சை போன்றவற்றின் தாற்பரியங்களையும், அதன் மூலம் எதிர்கொள்கின்ற உணர்வலைகளையும் அனுபவரீதியாகவே புரிந்தும், தெரிந்தும் கொள்ளவும் நோன்பு வாய்ப்பளிக்கின்றது.

இதனால் அடுத்தவர் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நம்மால் இயன்ற உதவிகளை நல்குவதற்கு நம்மை தயார் செய்துகொள்கின்ற பக்குவத்தையும், சினத்தை ஓரங்கட்டும்  தன்மையையும் நம்மில் குடிகொள்கின்றோம். இதனால் நம்மை மட்டுமன்றி, நமது சகோதரத்துவத்திற்குரிய அணைப்பையும், இணைப்பையும், ஈகையையும், தியாகத்தையும் வேரூன்றி நம்மில் வளர்த்துக் கொள்கின்றோம்.

உடல் ஆரோக்கியங்கள் பலவற்றிற்குரிய ஒன்றாக நோன்பு தொழிற்படுகின்றது. இதனை வைத்தியத் துறையினர் சான்றுகளுடன் ஆய்வு செய்து யதார்த்த விடயம் என்பதை ஒப்புவித்திருக்கின்றனர். நம்மை வந்தடைந்திருகின்ற சில நோய்களை தீர்ப்பதற்கான ஓர் அருமருந்தாகவும், இன்னும் சில நோய்கள் நம்மை அண்டிக்கொள்ளாது தடுத்துவிடுகின்ற ஒரு கேடயமாகவும் உபவாசம் இருக்கின்றது.

இன்றைய இளைஞர்களில் அநேகர் நோன்புக் கடமை வயோதிப ஆண், பெண்களுக்குத்தான் கடமை என்ற போக்கில் வாழ்வதைக் காண முடிகின்றது. இத்தகைய போக்கிலிருந்து விடுதலை பெற்று நோன்பு நோற்பதன் மூலம் பெறுகின்ற பெறுபேறுகளையும், பேருவகைகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மனோ இச்சையின் போக்கில் வாழத் துணியும் இளமைப் பருவத்தில் மார்க்கத்துக்கு இணக்கமான கைங்கரியங்களில் செயல்பட முன்வர வேண்டும். அப்போதுதான் அல்லாஹ் ஆசிக்கின்ற அடியானாக மாற முடியும். மாறாக இளமைப் பருவத்தை வீணாக கழித்து விட்டு வயோதிபக் காலத்தில் வணக்கம் புரிந்து வாழ்வோம் என்று வாழ்வது எவ்வளவு மடத்தனமான போக்கு என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று இருக்கும் நாம் நாளை இருப்போமா? என்பது கேள்விக்குறி. இத்தகைய நிச்சயமற்ற வாழ்வுக்குரிய நாம் எப்படி இவ்வாறு ஆதரவு வைத்து வாழத் துணிவது?

இளமைப்பருவத்தில் செய்கின்ற நல்லமல்களே அல்லாஹ்விடம் ஏற்றமுள்ளதாகும். (வயோதிபர்களின் அமல்களும் ஏற்றமுள்ளதுதான்.ஆயினும், கூலி பெறுவதில் கூடியது இளமைப்பருவத்தில் செய்கின்றவைக்குத்தான்.) ஏனெனில், இளமைப்பருவம் என்பது பொல்லாததும், ஷைத்தானின் வழிகேட்டில் சிக்கிக்கொள்வதற்கும் இலகுவானதாகும். இதிலிருந்து பாதுகாத்து இறைவனுக்குப் பொருத்தமான பாதையில் வழிநடப்பது வயோதிபத்தை விடச் சிறந்ததாகும்.எனவே, எமது இளைஞர்கள் இதனைக் கருத்திற் கொள்ள வேண்டும்.


எனவே, இஸ்லாத்தின் கடமைகள் இலகுவானவையாகும். இதனை நாமுணர்ந்து கொள்ளாது பெரிதாக எண்ணிக் கொண்டுள்ளோம். இளைஞர்கள் தங்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியமானதும், அவசரமானதுமாகும். அருட்களை அளவின்றி அள்ளி அருளும் மாண்புமிகு ரமழானின் தத்துவங்களை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இளைஞர்களாகிய நாம் மகத்துவமிக்க ரமழானின் பயன்களை பெறுவோமாக. என்ற உணர்வில் நிலை கொள்ள வேண்டும்.

”ஒவ்வொரு வஸ்துவிற்கும் (சுத்தப்படுத்தக்கூடிய) ஸகாத் உண்டு. உடலின் ஸகாத் (சுத்தப்படுத்துவது) நோன்பாகும். நோன்பு பொறுமையின் பாதியாகும்.”
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) ஆதாரம்: இப்னுமாஜா)

”சுவர்க்கத்தில் ‘ரய்யான்’ என்ற ஒரு வாசல் உண்டு. நோன்பு நோற்றவர்களே மறுமையில் அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்களோடு வேறு எவரும் நுழையமாட்டார்கள்.”
(அறிவிப்பாளர்: ஸஹ்ல் (ரழி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

”ஆதமின் குமாரனுடைய ஒவ்வொரு நற்செயலுக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை நற்கூலி வழங்கப்படுகிறது. நோன்பைத் தவிர்த்து (ஏனெனில்) அது எனக்குரியது. எனக்காக மனிதன் தனது இச்சைகளையும் உணவுகளையும் விட்டுவிடுகின்றான்.”
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)

ஏராளமான புண்ணியங்களை நமக்கு ஈட்டித்தரவல்ல நோன்பினை நோற்று அளவிட முடியாத அருட்கொடைகளை தமதாக்கி இம்மை, மறுமை ஆகிய ஈருலகிலும் ஈடேற்றங்களைப் பெற்றுக்கொள்வதற்கு திடசங்கற்பம் பூண்டு அருள் ரமழானில் எம்மையும் இணைத்து இன்புறுவோர்களாக நாம் மாற வேண்டும்.

நோன்பு நோற்பதற்காக ஸஹர் செய்ய வேண்டி இருப்பது நாம் அறிந்ததே. இச்செயற்பாட்டிற்குக்கூட பல்வேறு அர்த்தங்களையும், பல்வேறு நன்மைகளையும் இஸ்லாம் கோடிட்டுக்காட்டுகிறது. அவற்றிலிருந்து சில பகுதிகளை நமது பார்வைக்குட்படுத்துவோம்.


”(நோன்பு நாட்களில் நோன்பு பிடிப்பதற்காக) வைகறைப் பொழுதில் சாப்பிடுங்கள். (அவ்வாறு ஸஹர் செய்வதற்காக) வைகறைப் பின் ஜமாத்தில் உண்பதிலே (பறக்கத்) அபிவிருத்தி உண்டாகின்றது.” என நபியுல்லாஹ் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரழி) ஆதாரம்: புகாரீ. முஸ்லிம்)
“முஸ்லிம்களாகிய (எங்களின்) நோன்புக்கும் வேதக்காரர்களின் நோன்புக்குமுள்ள வித்தியாசம் வைகறைக்கு முன் உண்பதாகும்.” என அம்ரிப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத்)
 
“நோன்புக்காக ஸஹர் நேரம் உண்பது முழுவதும் பறக்கத்தை உண்டாக்கும். ஒரு மிடறு நீரை உட்கொள்வதாக இருந்த போதிலும் அதை விட்டு விட வேண்டாம். ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் ஸஹர் செய்பவர்கள் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள். (அல்லாஹ் ஸஹர் செய்வோரை மன்னித்து அருள் புரிகின்றான். மலக்குகள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்து அல்லாஹ்விடம் கெஞ்சிக்கேட்பார்கள்.) என நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.
(அறிவிப்பாளர்: அபூ ஸயீதுனில் குத்ரி (ரழி) ஆதாரம்: முஸ்னத் அஹ்மது)
 
“நோன்பு திறக்கச்செய்தல்” எனும் செயற்பாடு இன்று ஒரு பெஷனாக மாறி இருக்கின்றது. இதில் நாம் ஆட்சேபிக்க வேண்டிய ஒரு விஷயமும் இருக்கின்றது. முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களை அழைத்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ஹோட்டல்களிலிருந்து விகாரை வரை செய்கின்றனர். இவர்களின் நோன்பு திறக்கச் செய்தலில் பங்குபற்றுவதை நாம் தவிர்க்க வேண்டும்.
 
ஏனெனில், முஸ்லிம் அல்லாதவர்களின் பணம் ஹலாலான முறையில் சம்பாதிக்கப்பட்டதா? உணவில் ஹறாம் கலக்காதவையா? என்ற நியாயபூர்வமான சந்தேகங்கள் இருப்பதனால் இது தவிர்க்கப்படல் வேண்டும். மற்றும் நோன்பு திறக்கச் செய்பவர்கள் நன்மை அடைய வேண்டுமென இஸ்லாம் விரும்புகின்றது. இதற்கு இங்கு வழி இல்லை. ஆகையால், இதனைத் தவிர்ப்பதுதான் ஏற்றமானது என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
 
நோன்பு திறக்கச் செய்வதினால் பின்வரும் நன்மைகளை அவர்கள் எய்துகொள்கின்றனர். இது முஸ்லிம் அல்லாதவர்கள் ஈட்டிக்கொள்ள முடியாது. ஆனால், இதனை நமது முஸ்லிம் சகோதரர்கள் கடைப்பிடிகின்ற போது பாரிய விளைவுகளை சொந்தம் கொள்கின்றனர். இதனைப் பின்வரும் கூற்றுக்களின் வாயிலாக நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
 
”யாராவது ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் உணவை அளித்தால் நோன்பாளியின் நன்மையைப் போன்று இவனுக்கும் நன்மை கிடைக்கும். ஆனால் நோன்பாளியின் நன்மை கொஞ்ச அளவேனும் குறைக்கப்பட மாட்டாது.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஸல்மான் (ரழி) ஆதாரம் : தபறானி, தர்கீப்)
 
ஒரு நீளமான ஹதீஸில் பின்வருமாறு காணப்படுகின்றது. ”றமழானில் ஒரு நோன்பாளிக்கு நோன்பு நோற்பதற்குரிய உணவை யாராவது கொடுத்தால் அது அவனது பாவங்களுக்கு மன்னிப்பாகவும் அவனை நரகை விட்டு உரிமையிட்டதாகவும் ஆ(க்)கி விடும். மேலும் நோன்பாளியின் நன்மையின் அளவுக்கு அவருக்குக் கிடைக்கும். (இதனால்) நோன்பாளியின் நன்மையில் சற்றும் குறைக்கப்படமாட்டாது. (இதைக் கேட்ட மாத்திரத்தில் ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி) நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்யக்கூடிய உணவை எங்களில் ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ளமாட்டர்களே என்று (பரிவோடு) கேட்டார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “பேரீச்சம் பழத்தைக் கொடுத்து அல்லது ஒரு மிடறு பாலைக் கொடுத்து நோன்பு திறக்கும் படி செய்தவர்களும் இந்தப் பலாபலனை அல்லாஹ் கொடுப்பான்.” என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: ஸல்மானுல் பாரிஸி (ரழி) ஆதாரம் : இப்னு குஸைமா, தர்கீப்)
 
”நோன்பு பிடிக்க இயலாத நோய் ஏற்படின் நோன்பை  விட்டுவிடலாம். அவ்வியாதியுடன் நோன்பு நோற்றால் உயிருக்கு அபாயம் ஏற்படலாமென்ற அச்சப்படுகின்ற போது நோன்பை விடலாம். இவை திறமையான வைத்தியரால் முடிவு செய்யப்படுவது முக்கியம்.” பிரயாணத்தில் நோன்பு பிடிக்கக்கூடிய வசதிகள் இல்லாத போதும் நீண்ட பயணத்தால் களைப்பு, பலவீனம் ஏற்படலாம் எனும் நிலை காணுமிடத்து வாகனங்களால் சிரமங்கள் ஏற்படக்கூடிய போதும் நோன்பை விடலாம்.பிரயாணம் நாற்பத்தெட்டு மைல்களுக்கு மேலென்றால்தான் இந்தச்சலுகைக்கு இடமுண்டு.
 
சொந்த இடம் போன்ற வசதி உள்ள பிரயாணமானால் உபவாசம் பூணுவது உத்தமமாகும். பயணத்தை மேற்கொள்வது அதிகாலை பஜ்ருக்கு முன்பென்றால்தான் இச்சலுகையைப் பெற முடியும். இல்லையேல் நோன்பு நோற்பது கடமையாகும். நோன்பு நோற்றிருக்கும் போது கடும் வியாதி தோன்றி உயிருக்கு அபாயம் ஏற்பட்டாலும் இடையில் பிரயாணம் செய்ய வேண்டிய அவசிய(ச் சந்தர்ப்பம்)ம் ஏற்பட்டு அப்பயணத்தின் மூலம் நோன்பினால் கடும் சிரமத்தை பெற்றாலும் உடன் நோன்பை விட்டுவிடலாம்.
(ஆதார நூல்கள் : பத்ஹுல்கதீர், மஹல்லீ, வகையறா)

இவ்வாறான போதிய காரணங்களின்றி நோன்பை பேணிக்கொள்ளாதவர்கள் எண்ணற்ற நன்மைகளைப் பெறத்தவறிய துரதிஷ்டசாலிகள் என்றே கூற வேண்டும். இதில் வேறு கருத்திற்கு இடமில்லை. உடல் வலிமை உள்ளவர்கள் ரமழான் மாதம் கிடைக்கப்பெற்றால் நோன்பு நோற்பது கட்டாயக் கடமையாகும். நோன்பு நோற்பதன் மூலம் சில நோய்கள் தீர்ந்துவிடுவதற்கும் வழியாகிறது. உபவாசம் மேற்கொள்வதினால் தேகம் புத்துணர்வு பெறுகின்றது. இப்படி பல்வேறு கோணங்களிலும் நோன்பு நோற்பது நன்மைகளை ஈட்டித்தருகின்றன.


எம்.எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்தமருது

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.