ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் -தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.தொடர்ச்சியாக இனவாத கருத்துக்களை வெளிப்படுத்தி, முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதுடன் முஸ்லிம்களின் வணக்கத்திற்குறிய ஏக இறைவன் அல்லாஹ்வை இழிவுபடுத்திப் பேசும் பொது பல சேனாவின் ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு தவ்ஹீத் ஜமாஅத் அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறது.

பொது பல சேனா மற்றும் அதன் நிர்வாகியாக இருக்கும் ஞானசார தேரர் ஆகியோரினால் கடந்த காலங்களில் பரப்பப்பட்ட இனவாத கருத்துக்கள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கும், இந்து, கிருத்தவ மக்களுக்கும் எதிராக பாரியளவிலான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இதன் உச்சகட்டமாக 16.06.2014 அன்று பாரியளவிலான இனக் கலவரம் ஒன்று அளுத்கமை, பேருவலைப் பகுதிகளில் இந்த அமைப்பினரால் கட்டவிழ்த்து விடப்பட்டது.

• முஸ்லிம்களின் வணக்கத்தளங்களை தாக்குதல்,
• முஸ்லிம்களின் கலாசாரங்களுக்கு எதிரான தாக்குதல்கள்,
• முஸ்லிம் பெண்களின் ஆடைகள் பற்றிய இனவாத பரப்புரைகள்,
• முஸ்லிம் பாடசாலைகள், மற்றும் இஸ்லாமிய நிறுவனங்கள் பற்றிய இனவாத பிரச்சாரங்கள்,
• முஸ்லிம்களின் வர்த்தக நிலைகங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள்.

என சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனாவும், ஞானசார தேரரும் முன்னெடுத்த வன்முறைகள் ஏராளமானவையாகும்.

முஸ்லிம்களுக்கு எதிரான பொது பல சேனாவின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கு எதிராகவும் சட்ட ரீதியாக முஸ்லிம்கள் பல முறை அனுகிய போதும் அவை இன்று வரை முடிவில்லாத விடயமாகவே காணப்படுகின்றது.

இதுவரைக்கும் ஞானசார தேரருக்கு எதிராக 18 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டும் எந்த விதமான சட்ட நடவடிக்கையும் அவர் மீது அரசினால் எடுக்கப்பட வில்லை.

ஞானசாரவுக்கு எதிராக பேசியதற்காக தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை கைது செய்த அரசாங்கம் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும், முஸ்லிம்களின் உயிரை விட மேலான திருமறைக் குர்ஆனையும் பல முறை இழிவுபடுத்திப் பேசிய ஞானசார தேரருக்கு எதிராக இதுவரை எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்காதது ஏன்?

தன்னை கைது செய்ய வந்தால் வேறுவிதமான விலைவுகள் ஏற்படும் என்று சட்டத்தையும், பொலிசாரையும், நீதி மன்றத்தையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கும் இவரை இதுவரை கைது செய்யாதது ஏன்?

சீருடையற்ற பொலிஸ் காரர்களாக நாங்கள் மாறுவோம் என்று சட்டத்திற்கே சவால் விட்டுப் பேசும் ஞானசாரவின் இந்தப் போங்கு சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அரசாங்கத்தை சந்தேகிக்க வைக்கும் செயலாகவே தொடர்ந்தும் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பொலன்னறுவை, சோமாவதிய பகுதிக்கு சென்ற பொது பல சேனாவின் பிக்குகள் மற்றும் ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் அங்கிருந்த முஸ்லிம்களின் குடியிருப்புகளை அடித்து நொறுக்கியதுடன் முஸ்லிம்கள் உயிரை விட மேலாக மதித்து வணங்கி வழிபடும் ஏக இறைவனை எழுத்தில் சொல்ல முடியாத அசிங்கமான வார்த்தைகளை கொண்டு இழிவுபடுத்த முயன்றார்.

புனித அல்குர்ஆனை அவமதித்த குற்றச்சாட்டில் ஏற்கனவே இவர் மீது வழக்கு பதியப்பட்டு நீதி மன்றத்தில் விசாரனையில் இருக்கும் நிலையில் மீண்டும் மீண்டும் அல்லாஹ்வை அவமதித்து உலக மக்களுக்கான பொது மறையான திருமறைக் குர்ஆனையும் இழிவுபடுத்தும் காரியத்திலும் இவர் ஈடுபட்டு வருகிறார்.

சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளை தடுத்து, முஸ்லிம்களின் மத சுதந்திரத்திற்கு எதிராக செயல்படுவதுடன் பூர்வீக மண்ணில் வாழ்ந்து வரும் மக்களை சிங்கள மக்களின் இடங்களை அபகரித்தவர்களாக சித்தரித்து அவர்களுக்கு எதிரான தாக்குதல்களையும் இவர் தூண்டி வருகிறார்.

ஏற்கனவே அளுத்கமையில் ஏற்பட்ட கலவரத்திற்கும் முதன்மை தூண்டுகோளாக இவருடைய இனவாத பேச்சுக்களே அமைந்திருந்தன. இந்நிலையில் அளுத்கமை கலவரம் நடைபெற்று 1000ம் நாட்களையும் தாண்டிவிட்ட நிலையில் அரசாங்கம் இதுவரை ஞானசார தேரருக்கோ பொது பல சேனாவினருக்கோ எதிராக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காதிருப்பதை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

நாட்டில் குழப்பத்தை உண்டாக்கி, சிறுபான்மை மக்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிட்டு, மதங்களை அவமதிக்கும் காரியத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நல்லாட்சி (?) அரசாங்கம், இது போன்ற இனவாதிகளுக்கு உறுதுணையாக இருப்பதுடன் ஜனாதிபதியவர்கள் ஞானசார தேரவை சரிக்கு சமனாக அமர வைத்து ஆலோசனைகளையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் நல்லாட்சி (?) அரசாங்கம் அமைவதற்கு பாடுபட்டு உழைத்து, ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம்களை நேருக்கு நேர் அவமானப்படுத்தும் காரியத்தில் தெளிவாக ஜனாதிபதி ஈடுபடுகிறார்.

நல்லாட்சி அரசு தொடர்ந்தும் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள விரும்பினால் உடனடியாக ஞானசார தேரரை கைது செய்து உரிய தண்டனை வழங்குவதுடன் பொது பல சேனா என்ற இனவாத, இனத் துவேஷத்தை பரப்பும் அமைப்பையும் உடனடியாக தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை வைக்கிறது.

அத்துடன், ஞானசாரவின் கொட்டம் அடக்கப்படா விட்டால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட அதே நிலைதான் மைத்திரிபால சிரிசேனவுக்கும், நல்லாட்சி அரசாங்கத்திற்கும் ஏற்படும் என்பதையும் கூறிவைக்க விரும்புகிறோம்.

A.G ஹிஷாம்,
பொதுச் செயலாளர்,
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.