முத்துப்பேட்டை அருகே மின்கம்பி உரசி தீ விபத்து லோடு ஆட்டோ எரிந்து நாசமானது.முத்துப்பேட்டை அருகே மின்கம்பி உரசி ஏற்பட்ட தீ விபத்தில் வைக்கோல் ஏற்றிய லோடு ஆட்டோ எரிந்து நாசமானது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காளியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் செய்யது அலி அகமது. இவருக்கு சொந்தமான லோடு ஆட்டோவை சந்திரசேகரன்(48) என்பவர் ஓட்டி வருகிறார். நேற்று  சிறுபனையூரிலிருந்து வைக்கோல் ஏற்றிக் கொண்டு புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். நாச்சிக்குளம் குடியிருப்பு பகுதியில் சென்றபோது  அப்பகுதியில் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பி உரசியதில் வைக்கோல் தீப்பிடித்தது. இதனைக் கண்ட அப்பகுதியினர் சத்தமிட்டனர். இதையடுத்து லோடு ஆட்டோவை டிரைவர் சந்திரசேகரன் நிறுத்தினார். தீ வேகமாக பரவி எரிவதைக்கண்டு இந்த இடத்தில் நிறுத்தினால் அருகேயுள்ள கூரை வீடுகள், கடைகள் எரிந்து அசம்பாவிதம் ஏற்படும் என்று அச்சமடைந்தார். இதனால் எரியும் நிலையிலேயே ஆட்டோவை மீண்டும் எடுத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள குளத்திற்குள் இறக்கினார். ஆனால் அதற்குள் அவர் மீதும் தீ பற்றியது. இதனால் குளத்திற்குள் ஆட்டோ இறங்காமல் பாதியில் நின்றது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை ஆட்டோவிலிருந்து மீட்டனர். இருப்பினும் அவர் உடல் கருகி பலத்த காயமடைந்தார்.

 தகவல் அறிந்து வந்த முத்துப்பேட்டை தீயணைப்பு  வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் ஆட்டோவும், வைக்கோலும் முழுமையாக எரிந்து நாசமாயின. இது குறித்து  முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகிறார். டிரைவர் சந்திரசேகரனுக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார்.

அதிகாரிகள் அலட்சியத்தால்

இப்பகுதியில் ஏற்கனவே வைக்கோல் ஏற்றி சென்ற 2 லாரிகள் இது போன்று மின்கம்பியில் உரசி  தீக்கிரையாயின. இதனையடுத்து தாழ்வாக உள்ள இந்த கம்பிகளை சரி செய்து உயர்த்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திடம் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அலட்சியமாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.